Wednesday 3 April 2013



ஓய்வு...
உண்பதில் இருந்து, உடுத்துவதிலிருந்து ஓய்வில்லை;
சண்டைகளில் இருந்தும் சத்தங்களில் இருந்தும்
சற்றும் ஓய்வில்லை;
கோபங்களில் இருந்தும் பொறாமையில் இருந்தும்
கொஞ்சமும் ஓய்வில்லை.

பின் எதிலிருந்துதான் ஓய்வு?
எது தான் ஓய்வு?

பணியினூடே..
பக்கத்து மேஜை நண்பரோடு
சிரித்துப் பேசுவதில் இருக்கிறது, ஓய்வு;

மணிக்கொருதரம்...
தேநீரோடு அடிக்கும்
அரட்டையில் இருக்கிறது, ஓய்வு;

வருடும் இசையில்,
அறிவூட்டும் புத்தகங்களில்...
புதைந்திருக்கிறது, ஓய்வு.

நிமிர்ந்த நிலையிலிருந்து சாய்வதிலும்
சாய்ந்த நிலையிலிருந்து நிமிர்வதிலும்
ஒளிந்திருக்கிறது, ஓய்வு.

ஓய்வு...
ஒதுக்க முடியாத ஒரு மகத்துவம்;
விளக்க முடியாத ஒரு உன்னதம்.

ஓய்வு...
சுடும் வெயிலின் வெம்மை தணிக்கும்
சுகமான நிழல்;

ஓய்வு...
வறண்ட நாவைத் தீண்டிடும்
குளிர் நீர்.

பூஜ்யத்தைச் சேராத எண்ணிற்கு
மதிப்பு உயர்வதில்லை.
ஓய்வினைச் சேராத எந்த உழைப்பும்
தொடர்ந்து ஜொலிப்பதில்லை.

உண்மையில்...
உறக்கம் கூட ஓய்வல்ல..
அடுத்த நாள் வேலைக்கு
அனல் சேகரிக்கும் தவம்!

ஓய்வு...
ஒதுக்க முடியாத ஒரு மகத்துவம்;
விளக்க முடியாத ஒரு உன்னதம்.

1 comment:

  1. ஆனால் நிரந்தரமான ஓய்வென்பது மரணத்திற்கு பின்பே!

    ReplyDelete