Wednesday 3 April 2013



ஓய்வு...
உண்பதில் இருந்து, உடுத்துவதிலிருந்து ஓய்வில்லை;
சண்டைகளில் இருந்தும் சத்தங்களில் இருந்தும்
சற்றும் ஓய்வில்லை;
கோபங்களில் இருந்தும் பொறாமையில் இருந்தும்
கொஞ்சமும் ஓய்வில்லை.

பின் எதிலிருந்துதான் ஓய்வு?
எது தான் ஓய்வு?

பணியினூடே..
பக்கத்து மேஜை நண்பரோடு
சிரித்துப் பேசுவதில் இருக்கிறது, ஓய்வு;

மணிக்கொருதரம்...
தேநீரோடு அடிக்கும்
அரட்டையில் இருக்கிறது, ஓய்வு;

வருடும் இசையில்,
அறிவூட்டும் புத்தகங்களில்...
புதைந்திருக்கிறது, ஓய்வு.

நிமிர்ந்த நிலையிலிருந்து சாய்வதிலும்
சாய்ந்த நிலையிலிருந்து நிமிர்வதிலும்
ஒளிந்திருக்கிறது, ஓய்வு.

ஓய்வு...
ஒதுக்க முடியாத ஒரு மகத்துவம்;
விளக்க முடியாத ஒரு உன்னதம்.

ஓய்வு...
சுடும் வெயிலின் வெம்மை தணிக்கும்
சுகமான நிழல்;

ஓய்வு...
வறண்ட நாவைத் தீண்டிடும்
குளிர் நீர்.

பூஜ்யத்தைச் சேராத எண்ணிற்கு
மதிப்பு உயர்வதில்லை.
ஓய்வினைச் சேராத எந்த உழைப்பும்
தொடர்ந்து ஜொலிப்பதில்லை.

உண்மையில்...
உறக்கம் கூட ஓய்வல்ல..
அடுத்த நாள் வேலைக்கு
அனல் சேகரிக்கும் தவம்!

ஓய்வு...
ஒதுக்க முடியாத ஒரு மகத்துவம்;
விளக்க முடியாத ஒரு உன்னதம்.

Monday 11 March 2013

அடுத்த மகளிர் தினத்தன்றாவது....



வாழ்த்துக்கள் சொன்னேன் -
மகளிர் தினத்தன்று.
நேரில்,  ஒரு சிலருக்கு;
குறுஞ்செய்தி வழியாய் மேலும் சிலருக்கு;
அலுவலக அறிவிப்புப் பலகையில்  
அலங்கார வாழ்த்து ஒட்ட
அதிகம் மெனக்கெட்டேன் – அதில்,
பெண்மையின் மேன்மையை
ஊருக்குப் பறைசாற்றினேன்!
மாலையில் வீடு திரும்பியபின் தான் - என்
மரமண்டைக்கு உரைத்தது;
உயிர் தந்து உருவாக்கிய தாயை,
உடன் உறைந்து நிறைவு தரும் மனைவியை,
பெற்றெடுத்த நன்முத்துக்களை
வாழ்த்தவில்லையே என்று!
சபதம் செய்தேன் -
அடுத்த மகளிர் தினத்தன்று - என்
முதல் வாழ்த்து இவர்களுக்கே என்று!

Wednesday 6 March 2013

நண்பன் கிருஷ்ணகுமாரின் குறுங்கவிதையை
உங்களின் ரசனைக்கும்  வைக்கிறேன்.
___________________________________________________________________________




குப்புறப் படுத்து தூங்கியது குழந்தை;
சுகமாயிருந்தது -
தலையணைக்கு!

_____________________________________________________________________________




சந்தோசத்தில் .....
மேலும் கீழும் .....
குதியாட்டம் போட்டது;
குழந்தையை சுமந்த தொட்டில்!

Wednesday 27 February 2013

ஆதலால், மீண்டும் பேசுகிறேன்!

நிறைய நண்பர்கள் .....
நிறைய தோழர்கள் .....
என்னிடம் கேட்டார்கள்,
இப்போதெல்லாம் சங்கக் கூட்டங்களில்
ஏன் அதிகம் பேசுவதில்லை என்று.

பேசுவதைக் காட்டிலும் பேச்சைக் கேட்பது சுகமாக இருக்கிறது,
என்பது ஒரு காரணம்.
மற்றொன்று -
நம் முன் இருப்பவர்களிடம் பேச,
நமக்கு புதிதாக ஏதாவது தெரிந்திருக்க வேண்டும்,
அல்லது
முன்னிருப்பவர்கள் ஒன்றுமே தெரியாதவர்கள்
என்ற எண்ணம் வேண்டும்.
இது இரண்டுமே இல்லாத போது,
எதைப் பேசுவது?
எப்படிப் பேசுவது?
ஒரே பொருளை, ஒரே மாதிரி
திரும்பத் திரும்ப எல்லோரும் பேசுவதை
என்னால் ஏற்க முடிவதில்லை.
எனவே தான் சில நேரங்களில் நான் பேசுவதில்லை.

பிறிதொரு காரணமும் உண்டு.
சில பிரச்சனைகளை சில இடங்களில், சில நேரங்களில்
பேசியும் ஒன்றும் ஆகப் போவதில்லை.
அப்படி இருக்கும் போது,
நானும் அதைப் பேசி விட்டேன் என்று
வெறுமனே பதிவு செய்வதில் நாட்டமுமில்லை.
எனவே தான் சில இடங்களில் பேசுவதில்லை.

வெள்ளை மனதோடு கள்ளமில்லாமல்
குழந்தையாய் குதூகலித்துத் திளைத்த நண்பன்
குற்றஞ்சாட்டப்பட்டு கர்நாடகத்திற்கு துரத்தப் பட்டிருக்கிறான்;
அதைப் பேசினேன்; நிறுத்த முடியவில்லை.
விசாரனையை விரைவு படுத்த பேசினேன்;
நகர்த்தக் கூட முடியவில்லை.
இன்னும் இது போன்று நிறைய வலிகளைப் பேச்சாக்கினேன்;
அருமை என்றார்கள்;
அச்சச்சோ என்றார்கள்;
ஆம், விடக்கூடாது என்றார்கள்;
இறுதியில், ஒன்றும் செய்ய முடியவில்லை.
எவராலும் எதுவும் செய்ய முடியாதெனின்,
அவைகளை பேசுவதில் என்ன பயன்!
எனவே தான், பேசுவதில் விருப்பம் இல்லாதிருந்தேன்.

ஆனாலும், பலரும் விரும்புகிறார்கள்;
நான் பேச வேண்டும் என்று.
ஆதலால், மீண்டும் பேசுகிறேன் !

Tuesday 8 May 2012

செல்போன் சிறைக்குள் . . .

சமீபத்தில் சென்னையில் இருந்து திரும்பி
விருதுநகருக்குப் பயணப்பட்டேன்.
எனது அருகில்-
ஒரு தந்தையும் (50 வயதிருக்கலாம்) 
அவரது மகளும்(20 வயதிருக்கலாம்) பயணித்தனர்.
உணவு முடித்து நான், அவர்கள் மற்றும் அனைவரும்
துயில ஆயத்தமானோம்.
சற்று நேர நிசப்தத்தின் பின்,
செல்போனில் துவங்கின, முனகலான பேச்சுக்கள்.
மகள் தந்தையிடம் ஏதோ கேட்க,
செல் தொடர்பில் ஏற்பட்ட இடையூறு தாங்காமல்,  
தந்தை கோபத்துடன் “Don't disturb, I'm busy" என்றார்.
பாவம், மகள் மிரண்டு போய் அமைதியானாள்.
தந்தை எப்போது செல் பேச்சை முடிப்பார்,
பிறகு, தான் பேசலாம் என்று அவ்வப்போது
தந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அவர் முடித்த பாடில்லை.
அலுத்துப்போய், மகளும் செல் பெச்சைத் துவங்கினாள்.
பேச்சு களை கட்ட ஆரம்பித்து அப்பாவை மறந்தாள்.
சற்று நேரம் கழித்து
தந்தை மகளிடம், “என்னம்மா? கூப்பிட்டாயே!” என்றார்.
பதிலில்லை.
மூன்று நான்கு முறை கேட்ட பின்,
மகள் இப்போது சொன்னாள், “Dad, don't disturb, I'm busy".